ரெங்கா கருவாயன் மதுரையைச் சேர்ந்தவர். மருத்துவமனை ஒன்றில் நிர்வாக மேலாளராகப் பணிபுரிகிறார். தன் புகைப்படங்களை வெறும் அழகுணர்ச்சி மட்டும் சாராது, தான் பார்க்கும் விஷயங்களை, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் புதிய கோணத்தில் ஆவணப்படுத்தும் விதத்தில் அமைத்துக் கொள்கிறார். சமீபத்தில், மதுரையிலுள்ள பார்வையற்றோர் பள்ளியில், பார்வைக் குறைபாடு உடைய குழந்தைகளை மையப்படுத்தி இவர் நடத்திய ‘‘பார்வைக்காக'' என்னும் புகைப்படக் கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. பயணங்களில் ஆர்வமுள்ளவர். வேறுபட்ட நிலங்களைப் பதிவு செய்வதற்காகவே தேசத்தின் மூலைகளுக்கு லாரிகளில் பயணம் செய்பவர். இயற்கை ஆர்வலர். மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்புகளில் தவறாது காணக்கிடைக்கும் முகங்களில் ஒருவர் ரெங்கா கருவாயன்.
மே, 2017.